Sunday, July 14, 2019

Kumbakonam Temples கும்பகோணம் கோவில்கள்


கும்பகோணம் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று இணையத்தில் தேடிய பொழுது ஒவ்வொரு கோவிலும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் வரிசைக்கிரமமாக எவ்வாறு செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் வாடகைக்காரில் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
     காலை 7 மணிக்குக் கிளம்பி முதலில் ஸ்வாமி மலை – திருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் – திருக்கருகாவூர் – 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் ராமலிங்க ஸ்வாமி கோவில் – சுந்தரப்பெருமாள் கோவில் அருகில் உள்ள குரு சுராஜானந்தா ப்ருந்தாவனம் தரிசனத்துக்குப் பின் மதியம் ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 58 கி.மி.
     மாலை 4 மணி அளவில் கிளம்பி திருவிசைநல்லூரில் உள்ள ரிஷப ராசி பரிஹாரக் கோவில், கற்கடேஸ்வரர் கோவில், ஸ்ரீதர அய்யாவாள் மடம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் கோவிந்தா புரத்திலுள்ள விட்டல் ருக்மிணி கோவில், காஞ்சி மஹாபெரியவாள் தபோவனம், பகவந்நாம போதேந்த்ராள் அதிஷ்டானம் தரிசனம் செய்து 9 மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 35 கி.மி.
     இறைஅருளால் தாங்களும் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்.

Swamimalai & Thiruvalanchuzhi ஸ்வாமிமலை மற்றும் திருவலஞ்சுழி







ஸ்வாமிமலை: மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதி கீழே இருக்கிறது. முருகனை தரிசிக்க 60 படிகள் ஏறவேண்டும். 60 தமிழ் வருடங்களைக் குறிக்கும். சுலபமாக ஏற வசதியாக கைப்பிடிக் கம்பிகள் உள்ளன. கூட்டம் அதிகம் இல்லை. சஷ்டி கவசத்தின் பகுதியைப் பாடி வணங்கினோம்.
திருவலஞ்சுழி: மிகச்சிறிய ஊரில் மிகப்பெரிய கோவில். வலதுபுறம் அழகான தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. கோபுர வாயிலுக்கும் வினாயகர் சன்னதிக்கும் ஐந்து நிமிட நடை. வலஞ்சுழி வினாயகர் பாற்கடலைக் கடையும்போது வந்த வெண்ணிற அமுத நுரையிலானவர். சுவேத வினாயகர். ஒரு சாண் அளவே உள்ளார். மிகச்சிறப்பு வாய்ந்த கருங்கல் பலகணியைப் பார்த்தோம். சுற்றுப்ரகாரத்தில் உள்ள ஒவ்வொரு மாடத்திலும் ஒவ்வொரு டிசைனிலான பலகணிகள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தூண்களிலும் வித்தியாசமான செதுக்கல். கருங்கல்லிலான உயரமான விளக்குகள் அற்புதம். தனி சன்னதியில் வினாயகர் வாணி அம்மன் மற்றும் கமலாம்பிகை அம்மன் உடன் காட்சி தருகிறார். சிவன் சன்னதிக்கும் 5 நிமிட நடை.  
இத்தலத்தில் உறையும் இறைவர் சடைமுடிநாதர் அம்மன் ப்ருஹந்நாயகி என்ற பெரிய நாயகி அம்மன். அம்மன் சன்னதியில் அஷ்டபுஜ காளி அம்மன் காட்சி தருகிறார். மிகப்பெரிய சுற்றுப்ரகாரம். ஆள் நடமாட்டம் குறைவு. பகலில் தனித்து செல்ல தயக்கமாக இருந்தது. மிகப்பெரிய கோவில் என்பதால் சண்டிகேஸ்வரருக்கு தனியான பெரிய சன்னதி. சனி பகவானுக்கும் தனி சன்னதி.
தல வரலாறு: பகீரதனுக்காக ஆகாயத்திலிருந்து வந்த கங்கா தேவியை முடியில் தாங்கிய சிவனார் பூவுலகிற்கு கங்கையை வழிநடத்திய போது இவ்வூரில் நாக தேவர்கள் சிவராத்திரியில் பூஜிக்க வரும் பிலத்வாரத்திற்குள் புகுந்து விட்டாள். கங்கையை வெளிக்கொணர சடையுடன் கூடிய முனிவரோ அல்லது மன்னர் ஒருவரோ பிலத்வாரத்திற்குள் இறங்க வேண்டும். அருகிலுள்ள கொட்டையூரைச் சேர்ந்த ஹேரண்ட முனிவர் உதவ கங்கை வெளியே வந்தாள்.