Saturday, May 29, 2021

Canada Travel Documents

 

கனடாயணம்: பயண ஆவணங்கள்

தற்போதைய கொரோனா சூழ்நிலையில் கனடா அரசாங்கம் வழங்கும் பயண அங்கீகாரம் இருந்தால் மட்டுமே விமானத்தில் அனுமதி கிடைக்கும். அதற்கான தகவல்கள் அரசாங்க வலைத்தளத்தில் உள்ளன.

முதலில் நமக்கு பயணம் செய்யும் அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்ய சில கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு நாங்கள் பதில் அளித்தோம். இந்தியாவிலிருந்து கனடாவில் உள்ள PR Status இருக்கும் மகள் குடும்பத்தினரைக் காணச் செல்வதாக பதில் அளித்தோம். தாய் தந்தை ஆகியோர் immédiate family members என குறிப்பிடப்படுவதால் கனடா அரசாங்கத்தின் பயணத்திற்கான அங்கீகாரம் தேவைப்படாது. என் தாயார் பாட்டி என்பதால் extended family member ஆகிறார். எனவே அம்மா அவர்களின் விபரங்கள் பூர்த்தி செய்து டிஜிட்டல் கையெழுத்து போட்டு அந்தப் படிவத்தை ஈமெயில் மூலம் மகளுக்கு அனுப்பினோம். அவள் தன்னைப் பற்றிய தகவல் அதே படிவத்தில் பூர்த்தி செய்து கனடாவில் உள்ள ஒரு நோடரி பப்ளிக் முன்னிலையில்இவர் என் பாட்டி. இவர் கனடா வர அனுமதி வேண்டும்என்று கூறி கையெழுத்து போட்டு மேலும் நோட்டரி அவர்களும் அவர் முன்னிலையில் ஒப்புகை அளித்ததாகக் கையெழுத்து போட்டார். பூர்த்தி செய்த படிவம், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுடன் கனடா அரசாங்கத்திற்கும் பயணம் செய்ய அங்கீகாரம் தருமாறு மெயில் அனுப்பினோம். இரண்டு நாட்களில் பயண அங்கீகாரம் அளிக்கும் மெயில் வந்தது.

கனடா சென்று சேர்ந்தவுடன் 3 நாட்கள் கட்டாயமாக ஹோட்டலில் தங்க வேண்டும் என்று விதித்துள்ளனர். எனவே பயணம் அங்கீகரிக்கப்பட்டவுடன் மகளுடன் கலந்தாலோசித்து கனடா பியர்ஸன் ஏர்போர்ட் வளாகத்தில் உள்ள Alt Hotel லில் 3 நாட்கள் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்தோம். மேற்கண்ட ஏற்பாடுகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று மகளிடம் கேட்டு நாங்கள் செய்தோம். புதியதாக பல விஷயங்கள் தெரிந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

மற்றுமொரு முக்கியமான விஷயம் கனடா அரசாங்க அறிவுறுத்தல் காரணமாக பயணம் குறித்தனைத்துத் தகவல்களையும் ArriveCan என்ற மொபைல் அப்ளிக்கேஷனில் பதிவிட வேண்டும். பாஸ்போர்ட், விமானப்பயண விபரங்கள், கொரோனா குறித்த கேள்விகள்- கொரோனா பாதிப்பு இருந்ததா, தற்போது அறிகுறிகள் உள்ளனவா, முன்னணி சேவை செய்பவருடன் தொடர்பில் இருந்தவரா என சில கேள்விகள் மற்றும் கட்டாய ஹோட்டல் தங்கலுக்குப்பின் நாம் செல்லவிருக்கும் விலாசம், உள்ளூர் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். அனைத்துத் தகவல்களையும் அளித்த பின் ஒரு ஒப்புகை சீட்டு Receipt வழங்கப்படும். இமிகிரேஷனில் கேட்கும்போது காட்ட வேண்டும். இவற்றுடன் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்குள் கோவிட் டெஸ்ட் செய்து ரிப்போர்ட் பெற வேண்டும். நாங்கள் வீட்டிலிருந்தபடி டெஸ்ட் எடுத்து ரிசல்ட் மின்னஞ்சலில் பெற்றுக் கொண்டோம்.

இவ்வாறு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து ப்ரின்ட் செய்து ஒரு ஃபைலில் அடுக்கி வைத்தோம். இந்தத் தகவல்கள் யாரோ ஒருவருக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதுகிறேன். படித்ததற்கு மிக்க நன்றி. கனடாயணம் தொடரும்....

Portable Veena to Toronto

 கனடாயணம் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு

கனடா செல்ல அனுமதி கிடைத்ததும் வீணையை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம். சமீபத்தில் தான் வீணை ஆன்லைன் க்ளாஸில் சேர்ந்துள்ளேன். என் குரு ஸ்ரீமதி. மாலதி க்ருஷ்ணமணி அவர்கள் கும்பகோணத்தில் இருக்கிறார். சென்னையில் இருந்தவரை நேரில் கற்றுக் கொடுத்தார்கள். கொரோனா லாக்டௌன் வந்தபின் கும்பகோணம் சென்றுவிட்டார். ஆகவே ஆன்லைனில் தொடர்ந்து கற்கலாம் என்ற ஆசை. என் அம்மா அவர்கள் சிறு வயதில் இருந்தே வீணை கற்றுக் கொண்டு அவருடைய குருவுக்கு உதவியாக க்ளாஸ் எடுக்கவும் செல்வார். நான் சிறுமியாக இருந்த போது மிகக் குறைவான காலம் வீணை கற்றுக் கொண்டேன். சித்தி Banumathi Ranganathan அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் அம்மாவுக்கும் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வெளியே அலைய இயலாமல் வீணை வாசிப்பு நின்றுவிட்டது. பிறகு என் திருமணம் பேத்திகள் பிறப்பு என்று அம்மா முழுவதுமாக இசையின் பக்கமே திரும்பவில்லை. நான் விருப்ப ஓய்வு பெற்றதும் திடீர் ஞானோதயம் ஏற்பட்டது. அதுகாலம் வரை வீட்டில் வீணை இல்லை. எனவே அம்மாவுக்கு ஒரு வீணை வாங்க நினைத்தேன். தஞ்சாவூர் ஏகாண்ட வீணை மிகவும் புகழ் பெற்றது. அதையே அம்மாவுக்கு வாங்க விரும்பினேன். தம்பி Venkatraman Ranganathan மற்றும் Sathya Venkatesan ஆகியோரிடம் ஆலோசனை கேட்டேன். கூகுள் தேடலில் தஞ்சாவூர் வீணை வெங்கடேசன் என்பவர் பரம்பரையாக வீணை செய்பவர் என்று அறிந்து அவரைத் தொடர்பு கொண்டு வீணை வாங்கியாயிற்று.

இந்த வீணையை கனடா கொண்டு செல்வது கடினம் என்று தெரிந்தது. Air Cargoவிலோ, extra baggage ஆகவோ கொண்டு சென்றால் வீணை பத்திரமாக வந்து சேர்வது நிச்சயம் இல்லை. ஒருமணி நேரம் வெயிலில் இருந்தால்கூட வீணையின் மெழுகு உருகிவிடும். வீணையை பாக்கிங் செய்ய ஆகும் கட்டணம் வீணையின் விலைக்கும் அதிகம். விமானத்தில் எக்ஸ்ட்ரா சார்ஜ் வேறு. இந்த நிலையில் கூகுள் செய்தியில் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக பாகங்களைத் தனியாகக் கழற்றக்கூடிய சுலபமாக இணைக்க முடிகிற வீணை பற்றி படித்தேன். பெங்களூரில் பசவன்குடியில் Veena works என்ற கடையில் உரிமையாளர் ராஜூ என்பவர் செய்கிறார். அவரைத் தொடர்பு கொண்டு Portable Veena பற்றி விசாரித்து photos அனுப்புமாறு கேட்டேன். ஆனால் ஒரு மாதத்திற்குப் பின்னர் தான் என்னுடைய ஆடர் எடுக்க இயலும் மிகவும் பிஸியாக இருப்பதாகச் சொன்னார். வீணை செய்ய ஆடர் கொடுப்பதற்கு முன், முதலில் அந்த வீணையை வீடியோ கால் மூலமாகப் பார்க்க விரும்பினேன். என் பெங்களூர் நட்புக்களை பசவன்குடி சென்று உதவமுடியுமா என்று கேட்டேன். என் மகளிடம் இது குறித்து பேசியபோது அவளது தோழி Rohini Rajasekaran ஐக் கேட்கலாம் என்றாள். ரோஹிணி என் மகள் டெலிவரியின் போது ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்து மிகவும் உதவியாக இருந்தாள். எனக்கு நல்ல பழக்கமான பெண். அவளிடம் கேட்டபோது வீக் எண்டில் பசவன்குடி போகிறேன் எனவும் அவளது house owner ஒரு இசைக் கருவிகள் கடை வைத்துள்ளார் எனவும் Portable Veena அவரிடம் கிடைக்கும் என்றும் தெரிவித்தாள். பருத்தி புடவையாய் காய்த்தது போல எனக்கு ரொம்ப சந்தோஷம். அன்று மாலை வீடியோ காலில் ரோஹிணி குறிப்பிட்ட வீணையைப் பார்த்தேன். வீணை அழகாக இருந்தது. நாதம் கேட்க நன்றாக இருந்தது. கடைக்காரர் நேரில் வந்து வீணை வாசித்து திருப்தி அளித்தால் வாங்குங்கள் என்றார். நேரில் வரவேண்டியது மிகவும் அவசியம் என்றார். ஏப்ரல் 1ந்தேதி முதல் பெங்களூர் வருபவர்கள் கோவிட் நெகடிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி என்றறிந்து உடனடியாக பெங்களூர் சென்றேன். வீணை வாசித்ததில் மிகவும் பிடித்தது. வீணையின் இரு குடங்கள், யாளி அனைத்தும் கழற்றி தனியாக பேக் செய்து வீணை மெட்டுக்கள் முதல் மீட்டும் பகுதிவரை தனியாக கிடார் போல இருந்ததை கிடார் பேகில் பேக் செய்து கொடுத்தார். கிடார் பேக் தோளில் மாட்டிக் கொண்டு குடங்களை backpack ல் வைத்து கொண்டு வந்தேன். பெங்களூர் சென்ற போது என்னை கடைக்கு அழைத்துச் சென்று, வீணை செலக்ஷனில் உடனிருந்து, எனக்கு மிகுந்த அன்புடன் லஞ்ச் செய்து, கன்டோன்மெண்ட் ஸ்டேஷனில் டபிள் டெக்கர் ரயில் ஏறும் வரை ரோஹிணி என்கூடவே இருந்தாள். 

கிடார் பேக் வழக்கமான சூட்கேஸைவிட அதிக நீளம் uneven ஆக இருப்பதால் check in baggage or hand baggage இரண்டிலும் அனுமதிக்கப்பட்டார்கள். தனியாக கார்கோவில் அனுப்புங்கள் என்று தம்பி சொன்னான். ஆசையாய் வாங்கிவந்த வீணையைக் கொண்டு செல்லமுடியாதோ என்று மிகவும் வருத்தமாக இருந்தது. ஏர்லைன்ஸை தொடர்புகொள்வது, அபுதாபியில் இருக்கும் தம்பி Jeyakumar Srinivasan இடம் கேட்பது, லக்ஷ்மண் ஸ்ருதி கடையில் பக்கத்து வீட்டு நரஸிம்மன் மாமா அவர்கள் விசாரித்தது, இதுபோக மகளிடம் ஆலோசனை கேட்பது என ஒரு brain storming sessionஏ நடந்தது. இறுதியாக வீணையை ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் நேரே கொண்டு சென்று அனுமதி உண்டா என்று கேட்டோம். செக்கின் பாகேஜில் அனுமதி உண்டு. மிக நன்றாக பாக் செய்து வரவும் என்று சொன்னதைக்கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டருகே இருக்கும் பாக்கர்ஸில் விசாரித்ததில் பாக் செய்து தருவதாகச் சொன்னார். மருமகன் Kishor Selvaraj அருகில் இருந்து மிக அருமையாக பத்திரமாக பாக் செய்து வாங்கி வந்தார். விமானப்பயணத்திற்குத் தயாராக இருந்த வீணையைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஏர்லைன்ஸில் Fragile sticker ஒட்டி ஸ்கேன் செய்து மிக பத்திரமாக கனடா வரை கொண்டு வந்து சேர்த்தார்கள். நாங்கள் சந்தோஷமாய் வீணை வாசிக்கிறோம். ஆன்லைன் க்ளாஸ் ஆரம்பித்தாயிற்று. பேத்தி ஹாசினி தற்போது கொள்ளுப் பாட்டியிடம் வீணை கற்றுக் கொள்கிறாள்.

தலைப்பில் இடம் பெற்றுள்ள பாடல் எனது பேரன்புக்குரிய மாமன்மகள் லக்ஷ்மிப்ரபா சேகர் அவர்கள் குறிப்பிட்டது. எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல். கனடாயணம் தொடரும்….

Toronto Air travel by Etihad Airways

 

கனடாயணம் : ஆகாயத்தில் ஆனந்தம்

அபுதாபியில் காலை 9.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. உயரே உயரே செல்லும் போது அபுதாபியின் அழகான சாலைகளைப் பார்த்து ரசித்தோம். 14 மணிநேரப் பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினோம். இரவு சரியாகத் தூங்காததால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தூக்கம் வந்தது. நல்ல உறக்கம். விமான ஊழியர் உணவு தருவதற்காக எழுப்பினார். 14 மணிநேரப் பயணத்தில் மூன்று தடவை உணவு பரிமாறப்பட்டது. போதும் போதும் என்கிறார் போல் கணிசமான அளவு சாப்பாடு. பாஸ்மதி அரிசியில் செய்த சாதம், பருப்பு, பாலக் பனீர், கேக், பன், வெண்ணை, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவை முதலில் தரப்பட்டன. பின்னர் நீளமான சீஸ் சாண்ட்விச், மாம்பழ ஜுஸ், குக்கீஸ் மற்றும் காபி. பால் சேர்ந்த காபி வேண்டும் என்றதற்கு ஒரு சங்குப்பால் குழந்தைக்குத் தரும் அளவு சிறிய குப்பியில் தந்தார். மூன்றாவது முறையாக பாஸ்மதி அரிசியில் கேசரி கலரில் புலாவ், கருப்பு காராமணி போன்ற பயறு சுண்டல், வேக வைத்த காய் பெயர் தெரியவில்லை ஆகியவை பரிமாறப்பட்டது. சாப்பாடு அளவு தாராளம். குடிநீர் பாட்டில்கள் ஐஸ் வாட்டர் போல குடிக்க முடியவில்லை. வெந்நீர் கேட்டதும் கொடுத்தார்.

சாப்பிட்டவுடன் தொடுதிரையில் ஒரு தெலுங்கு மற்றும் கன்னடப்படம் பார்த்தோம். ஜன்னல் வழியாகப் பார்க்க விமானம் ஒரு இடத்தில் அசைவற்று நிற்பது போல தோன்றியது. அடர்ந்த வெள்ளை வெளேர் மேகக் கூட்ட நடுவில் பயணித்தபோது பாற்கடல் போல இருந்தது. ஸ்ரீ மஹா விஷ்ணு பாம்பணை மேல் துயில் கொண்டிருப்பதைக் கற்பனையில் பார்த்தேன். கீழே உள்ள நாடுகள் மேலிருந்து பார்க்க விதவிதமான பாட்டர்ன் போல காட்சியளித்த . தொடுதிரையில் விமானப்பயண விபரங்கள் பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெளியே உள்ள டெம்பரேச்சர், விமானம் கிளம்பி எத்தனை நேரம் ஆகிறது, எவ்வளவு தூரம் பறந்துள்ளோம், இனி பயணிக்க வேண்டிய தொலைவு என பல தகவல்கள் வீடியோ சகிதம் வருகின்றன. அதைப் பார்த்து வியந்தேன். அதை photo & vidéo எடுத்தேன். நீண்ட நேரப் பயண அலுப்பு தெரியவே இல்லை. விமானத்திற்குள் WiFi pack வாங்கினால் தான் இன்டர்நெட். டாலர்களில் விலை. ஆகவே மெஸேஜ் அனுப்ப இயலவில்லை.

மிகச்சில தடவைகள் விமானம் சற்றே ஆடியது. இறக்கைகள் படபடப்பது போல் இருந்தது. ஊழியர்கள் உடனடியாக வந்து சீட் பெல்ட் போடுமாறு கூறினர். மிகச்சில நிமிடங்கள் மட்டும் நீடித்தது. மற்றபடி சுகமான பயணம். விமானம் இறங்க அரைமணி நேரம் இருக்கும் போது விமானி இறங்கப் போகிறோம் என்று அறிவித்தார். அரபியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு. அப்போது விமானம் 40000 அடி உயரத்தில் இருந்தது. 10 நிமிடங்களில் படிப்படியாக இறங்கி 10000 அடி வரை உயரம் குறைந்தது. 20 நிமிடங்களில் இறங்க வேண்டிய நிலையில் உயரம் 20000 அடியாக இருந்தது. நிதானமாக உயரத்தை குறைத்து ரன்வேயைத் தொட்டு பறந்த வேகத்தில் வேகமாக ஓடிய விமானத்தை சரியாகக் கையாண்ட திறமையை வெகுவாக வியந்தேன். என்ன ஒரு திறமை. Perfection. Awesome. சென்னையில் அதிகாலை 2.55க்குப் புறப்பட்டு டொரன்டோவில் மதியம் 3 மணிக்கு இறங்கினோம். விமானக்கதவருகே வீல்சேர் உதவியாளர் Patricia இருந்தார். அந்தப் பெண்மணிக்கு 60 வயதாவது இருக்கும். அம்மா வீல்சேரில் நான் நடந்து வர அவர் எங்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். இமிகிரேஷனில் இருந்த அதிகாரி ரகுநந்தன் ArriveCan receipt காட்டச் சொன்னார். Sowbhagyaவின் Birth certificate, Passport பார்த்தார். Mask down please என்று முகங்களை சரிபார்த்தார். இவர் உங்கள் அம்மாவா என்றார். எங்கள் பெட்டியில் உணவுப் பண்டம் உள்ளதா என்று கேட்டார். ஆம் என்றதற்கு நெய், அசைவ உணவுகள் உள்ளனவா என்றார். நாங்கள் பேத்திக்கு தென் இந்திய ஸ்னாக்ஸ் மட்டும் உள்ளது என்றோம். எத்தனை நாள் தங்கல் என்றார். ஆறு மாதங்கள் என்றோம். இணைய தளத்தில் விண்ணப்பித்து மேலும் ஆறு மாதங்களுக்கு தங்கலை நீட்டிக்கலாம். Happy Stay  என்று கூறி பாஸ்போர்ட்டில் சீல் அடித்து போகலாம் என்றார்.

எனக்கு ஒரே வியப்பு. இமிகிரேஷனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அபியும் நானும் ப்ரகாஷ் ராஜ் மாதிரி நன்கு தயார் செய்து கொண்டு வந்தோம். இவ்வளவு தானா என்று ஏமாற்றமாக இருந்தது. ஹோட்டல் புக்கிங் விவரம் அனைத்தும் ArriveCan Appல் இருந்ததால் வேறு எதுவும் கேட்கவில்லை. அதன்பின் பெட்டிகளை எடுக்கச் சென்றோம். எங்கள் பெட்டிகள் கன்வேயர் பெல்ட்டிலிருந்து எடுத்து கீழே வைக்கப்பட்டிருந்தன. வீணை ஒருபுறம் பத்திரமாக இருந்தது. உதவியாளர் Patricia போர்ட்டரை அழைத்து எங்கள் பெட்டிகளை ட்ராலியில் வைத்து கொண்டு வரச் செய்தார்.

அடுத்ததாக On  arrival Covid19 Test. Patricia ரெஜிஸ்ட்ரேஷனில் நிறுத்தினார். பின்னர் Swab test எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது கனடா வந்து இறங்கிய பத்தாவது நாள் நமக்கு நாமே எடுக்க வேண்டிய Swab test kit கொடுத்தனர். எல்லாம் முடிந்து ஹோட்டல் செல்ல விமான நிலையத்தில் உள்ளே இருக்கும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். லிங்க் ட்ரெயின் என்று அழைக்கப்படும் ரயில் பயணம் பன்னாட்டு பயணிகளுக்கு இலவசம். ரயில் ஏறி  Alt Hotel Stationல் இறங்கினோம். போர்ட்டரும் பெட்டிகளுடன் வந்து பெட்டிகளை ஹோட்டலில் இறக்கி வைத்து விட்டுச் சென்றார். அம்மாவை ஹோட்டல் வரை வீல்சேரில் அமர வைத்து சுகமாக அழைத்து வந்தார் Patricia. தெரியாத நாட்டில் இத்தனை சுமைகளுடன் இவ்வளவு நியமங்களைப் பின்பற்றி எப்படி ஹோட்டல் வரை போவது என்று திணறியபோது கடவுள் அருளால் Patricia வந்து எங்களைப் பொறுமையாக ஹோட்டலில் கொண்டு வந்து சேர்த்தார். இறைவனுக்கும் அவருக்கும் அநேக நமஸ்காரங்கள், நன்றி தெரிவித்தோம். அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணைத்துள்ளேன்.

கொரோனா சூழ்நிலையில் வயதான இரு பெண்மணிகள் கனடா வந்தவிதத்தை வெளிநாடு செல்ல விரும்பும் பெண்களுக்கு உற்சாகமூட்டும் இந்தப் பதிவை எழுதுகிறேன். படித்ததற்கு மிக்க நன்றி

கனடாயணம் தொடரும்….