கனடாயணம் : ஆகாயத்தில் ஆனந்தம்
அபுதாபியில் காலை 9.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. உயரே உயரே செல்லும் போது அபுதாபியின் அழகான சாலைகளைப் பார்த்து ரசித்தோம். 14 மணிநேரப் பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினோம். இரவு சரியாகத் தூங்காததால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தூக்கம் வந்தது. நல்ல உறக்கம். விமான ஊழியர் உணவு தருவதற்காக எழுப்பினார். 14 மணிநேரப் பயணத்தில் மூன்று தடவை உணவு பரிமாறப்பட்டது. போதும் போதும் என்கிறார் போல் கணிசமான அளவு சாப்பாடு. பாஸ்மதி அரிசியில் செய்த சாதம், பருப்பு, பாலக் பனீர், கேக், பன், வெண்ணை, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவை முதலில் தரப்பட்டன. பின்னர் நீளமான சீஸ் சாண்ட்விச், மாம்பழ ஜுஸ், குக்கீஸ் மற்றும் காபி. பால் சேர்ந்த காபி வேண்டும் என்றதற்கு ஒரு சங்குப்பால் குழந்தைக்குத் தரும் அளவு சிறிய குப்பியில் தந்தார். மூன்றாவது முறையாக பாஸ்மதி அரிசியில் கேசரி கலரில் புலாவ், கருப்பு காராமணி போன்ற பயறு சுண்டல், வேக வைத்த காய் பெயர் தெரியவில்லை ஆகியவை பரிமாறப்பட்டது. சாப்பாடு அளவு தாராளம். குடிநீர் பாட்டில்கள் ஐஸ் வாட்டர் போல குடிக்க முடியவில்லை. வெந்நீர் கேட்டதும் கொடுத்தார்.
சாப்பிட்டவுடன் தொடுதிரையில் ஒரு தெலுங்கு மற்றும் கன்னடப்படம் பார்த்தோம். ஜன்னல் வழியாகப் பார்க்க விமானம் ஒரு இடத்தில் அசைவற்று நிற்பது போல தோன்றியது. அடர்ந்த வெள்ளை வெளேர் மேகக் கூட்ட நடுவில் பயணித்தபோது பாற்கடல் போல இருந்தது. ஸ்ரீ மஹா விஷ்ணு பாம்பணை மேல் துயில் கொண்டிருப்பதைக் கற்பனையில் பார்த்தேன். கீழே உள்ள நாடுகள் மேலிருந்து பார்க்க விதவிதமான பாட்டர்ன் போல காட்சியளித்த ன. தொடுதிரையில் விமானப்பயண விபரங்கள் பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெளியே உள்ள டெம்பரேச்சர், விமானம் கிளம்பி எத்தனை நேரம் ஆகிறது, எவ்வளவு தூரம் பறந்துள்ளோம், இனி பயணிக்க வேண்டிய தொலைவு என பல தகவல்கள் வீடியோ சகிதம் வருகின்றன. அதைப் பார்த்து வியந்தேன். அதை photo & vidéo எடுத்தேன். நீண்ட நேரப் பயண அலுப்பு தெரியவே இல்லை. விமானத்திற்குள் WiFi pack வாங்கினால் தான் இன்டர்நெட். டாலர்களில் விலை. ஆகவே மெஸேஜ் அனுப்ப இயலவில்லை.
மிகச்சில தடவைகள் விமானம் சற்றே ஆடியது. இறக்கைகள் படபடப்பது போல் இருந்தது. ஊழியர்கள் உடனடியாக வந்து சீட் பெல்ட் போடுமாறு கூறினர். மிகச்சில நிமிடங்கள் மட்டும் நீடித்தது. மற்றபடி சுகமான பயணம். விமானம் இறங்க அரைமணி நேரம் இருக்கும் போது விமானி இறங்கப் போகிறோம் என்று அறிவித்தார். அரபியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு. அப்போது விமானம் 40000 அடி உயரத்தில் இருந்தது. 10 நிமிடங்களில் படிப்படியாக இறங்கி 10000 அடி வரை உயரம் குறைந்தது. 20 நிமிடங்களில் இறங்க வேண்டிய நிலையில் உயரம் 20000 அடியாக இருந்தது. நிதானமாக உயரத்தை குறைத்து ரன்வேயைத் தொட்டு பறந்த வேகத்தில் வேகமாக ஓடிய விமானத்தை சரியாகக் கையாண்ட திறமையை வெகுவாக வியந்தேன். என்ன ஒரு திறமை. Perfection. Awesome. சென்னையில் அதிகாலை 2.55க்குப் புறப்பட்டு டொரன்டோவில் மதியம் 3 மணிக்கு இறங்கினோம். விமானக்கதவருகே வீல்சேர் உதவியாளர் Patricia இருந்தார். அந்தப் பெண்மணிக்கு 60 வயதாவது இருக்கும். அம்மா வீல்சேரில் நான் நடந்து வர அவர் எங்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். இமிகிரேஷனில் இருந்த அதிகாரி ரகுநந்தன் ArriveCan receipt காட்டச் சொன்னார். Sowbhagyaவின் Birth certificate, Passport பார்த்தார். Mask down please என்று முகங்களை சரிபார்த்தார். இவர் உங்கள் அம்மாவா என்றார். எங்கள் பெட்டியில் உணவுப் பண்டம் உள்ளதா என்று கேட்டார். ஆம் என்றதற்கு நெய், அசைவ உணவுகள் உள்ளனவா என்றார். நாங்கள் பேத்திக்கு தென் இந்திய ஸ்னாக்ஸ் மட்டும் உள்ளது என்றோம். எத்தனை நாள் தங்கல் என்றார். ஆறு மாதங்கள் என்றோம். இணைய தளத்தில் விண்ணப்பித்து மேலும் ஆறு மாதங்களுக்கு தங்கலை நீட்டிக்கலாம். Happy Stay என்று கூறி பாஸ்போர்ட்டில் சீல் அடித்து போகலாம் என்றார்.
எனக்கு ஒரே வியப்பு. இமிகிரேஷனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அபியும் நானும் ப்ரகாஷ் ராஜ் மாதிரி நன்கு தயார் செய்து கொண்டு வந்தோம். இவ்வளவு தானா என்று ஏமாற்றமாக இருந்தது. ஹோட்டல் புக்கிங் விவரம் அனைத்தும் ArriveCan Appல் இருந்ததால் வேறு எதுவும் கேட்கவில்லை. அதன்பின் பெட்டிகளை எடுக்கச் சென்றோம். எங்கள் பெட்டிகள் கன்வேயர் பெல்ட்டிலிருந்து எடுத்து கீழே வைக்கப்பட்டிருந்தன. வீணை ஒருபுறம் பத்திரமாக இருந்தது. உதவியாளர் Patricia போர்ட்டரை அழைத்து எங்கள் பெட்டிகளை ட்ராலியில் வைத்து கொண்டு வரச் செய்தார்.
அடுத்ததாக On arrival Covid19 Test. Patricia ரெஜிஸ்ட்ரேஷனில் நிறுத்தினார். பின்னர் Swab test எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது கனடா வந்து இறங்கிய பத்தாவது நாள் நமக்கு நாமே எடுக்க வேண்டிய Swab test kit கொடுத்தனர். எல்லாம் முடிந்து ஹோட்டல் செல்ல விமான நிலையத்தில் உள்ளே இருக்கும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். லிங்க் ட்ரெயின் என்று அழைக்கப்படும் ரயில் பயணம் பன்னாட்டு பயணிகளுக்கு இலவசம். ரயில் ஏறி Alt Hotel
Stationல் இறங்கினோம். போர்ட்டரும் பெட்டிகளுடன் வந்து பெட்டிகளை ஹோட்டலில் இறக்கி வைத்து விட்டுச் சென்றார். அம்மாவை ஹோட்டல் வரை வீல்சேரில் அமர வைத்து சுகமாக அழைத்து வந்தார் Patricia. தெரியாத நாட்டில் இத்தனை சுமைகளுடன் இவ்வளவு நியமங்களைப் பின்பற்றி எப்படி ஹோட்டல் வரை போவது என்று திணறியபோது கடவுள் அருளால் Patricia வந்து எங்களைப் பொறுமையாக ஹோட்டலில் கொண்டு வந்து சேர்த்தார். இறைவனுக்கும் அவருக்கும் அநேக நமஸ்காரங்கள், நன்றி தெரிவித்தோம். அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணைத்துள்ளேன்.
கொரோனா சூழ்நிலையில் வயதான இரு பெண்மணிகள் கனடா வந்தவிதத்தை வெளிநாடு செல்ல விரும்பும் பெண்களுக்கு உற்சாகமூட்டும் இந்தப் பதிவை எழுதுகிறேன். படித்ததற்கு மிக்க நன்றி
கனடாயணம் தொடரும்….
No comments:
Post a Comment