கனவு போல இருக்கிறது நாங்கள் கனடாவில் இருப்பது. அமெரிக்காவிலிருந்து மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்த மச்சினர் வேணுகோபால் அவர்கள் "நீங்க LTCல அமெரிக்கா வாங்க" என்று சொன்னார். மிகப்பெரிய நகைச்சுவையைக் கேட்டதுபோல் நாங்கள் சிரித்தோம். இத்தனை வருடங்கள் கழித்து நாங்கள் கனடா வருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் இன்று கனடாவில் இருப்பது கனவோ என சில சமயம் தோன்றுகிறது.
மூத்த மகள் சௌபாக்யா கனடா PR கிடைத்து 2018ல் இங்கு குடும்பத்துடன் வந்தாள். வந்து சில காலத்திற்குப் பின் எங்களை கனடா வருமாறு அழைக்க சமயம் சந்தர்ப்பம் கூடிவந்ததாக நினைத்த ஏப்ரல் 7 2020ல் டிக்கெட் முன்பதிவு செய்தோம். வந்தானே பாருங்கள் கொரோனா அரக்கன். மே 15ல் கொரோனா அலை முடிவுக்கு வரும் என்று முதன்முதலாக விஞ்ஞானபூர்வ ஆய்வைப்பார்த்து ஒரு மாதம் தள்ளிப் போகும் என நினைத்த பயணம் இருமுறை டிக்கெட் தேதி மாற்றம் செய்து ஏப்ரல் 11 2021ல் முடிவானது.
நடுவில் கொரோனா சற்று ஓய்ந்தது போல இருந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கனடா வெளிநாட்டுப் பயணிகளுக்கான விதிகளைத் தளர்த்திய போது கனடாவில் குளிர் அதிகம் என்பதால் பயணம் செய்ய இயலாது என்று கருதினோம். புத்தாண்டு பிறந்து சில மாதங்களில் லண்டனில் புதுவகை கிருமி வந்தது. அதன் பின்னர் கனடாவில் மீண்டும் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. மீண்டும் ஒரு முறை பயணத்தை ஒத்திவைக்கலாமா என்ற யோசனை வந்தது. அதே சமயம் இந்த நிலை எத்தனை மாதம் நீடிக்கும், விமானப்பயணம் அடியோடு நிறுத்தப்படுமா என்றெல்லாம் யோசித்து கனடா அரசின் பயண ஒப்புகை பெறுவதற்கான ஆவணங்களைத் தயார் செய்தோம்.
பயண ஏற்பாடுகள், இந்தியாவில் உள்ள வேலைகள் ஆகியவற்றை பட்டியல் போட்டு செய்தோம். பயணத்திற்குத் தேவையான பெட்டி, உடைகள், காலணிகள் போன வருடமே வாங்கியாயிற்று. இளைய மகள் அக்ஷயாவும் மருமகன் கிஷோரும் பெட்டிகளை அடுக்கி எடை சரிபார்த்து உதவினார்கள். நடு நடுவில் வங்கி சம்பந்தப்பட்ட பணிகள், ஷாப்பிங் செய்வது, வீக் எண்ட் ஹோட்டல் சாப்பாடு என்று எங்களுடனே அனைத்து நேரங்களிலும் அவர்கள் இருந்தனர். பேத்திகளின் (ஸ்வஸ்திகா, தாரா) பங்கேற்பு தனிவிதம். அடுக்கியவற்றை கலைப்பதும், ஹாசினிக்கு (கனடாவில் இருக்கும் பேத்தி) வாங்கியவற்றை எடுத்து வைத்துக் கொள்வதுமாக ஒரே கலாட்டா.
இதற்கிடையே நான் பெங்களூர் சென்று வீணை வாங்கி வந்ததை தனியாக எழுத வேண்டும். ஆக மூன்று சூட்கேஸ், ஒரு வீணை என மூன்று பாகேஜ்களுடன் ஏப்ரல் 10ந் தேதி இரவு 10 மணிக்கு ஏர்போர்ட்டுக்குப் புறப்பட்டோம். மதுரையில் இருந்து தம்பி பரணி வழியனுப்ப வந்திருந்தான். ட்ராலியில் பெட்டிகளை வைத்துத் தள்ளிச் செல்ல வேண்டிய போது மகள் அதிகமாக பெட்டிகளை எடுத்துவர வேண்டாம் என்று சொன்னது ஞாபகம் வந்தது. வேறொரு பயணி உதவியுடன் ட்ராலியை உள்ளே கொண்டு சென்றோம். ஏர்லைன்ஸ் கவுண்டர் ஸ்டாப் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொண்டு "உங்கள் பயண ஒப்புகை மற்றும் விபரங்கள் சரிபார்க்க வேண்டும். ஆகையால் சற்றே அமருங்கள்" என்றார். எங்களைப் போன்று வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி. அவரும் கனடா போகிறாரா, காத்திருக்கச் சொன்னார்களா என்று விசாரித்தேன். ஆம் என்றார். நிம்மதியானது. ஏனெனில் கடைசி ஒரு வாரமாக தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகம் என்று செய்திகள் வந்தன. பயணம் தடையின்றி நடைபெறுமா அல்லது எப்போது புது விதிகள் வந்து தடை ஏற்படுமோ என்ற பயம் இருந்தது. அம்மாவிடம் விமானம் ஏறி அமர்ந்து கனடா போய்ச் சேர்ந்தால் தான் நிச்சயம் என்று சொல்லி இருந்தேன்.
சற்று நேரத்தில் அலுவலர் ஒருவர் எங்கள் ஆவணங்களை சரிபார்த்து ஒருவாறாக போர்டிங் பாஸ் கொடுத்தார். இளைய மகள் குடும்பத்தோடு வழியனுப்ப வந்தவர்கள் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆவதை அறிந்து கவலையுடன் காத்திருந்தனர். வெளியே செல்ல அனுமதி இல்லாததால் போன் மூலம் பேசி கண்ணாடி தடுப்புக்குப்பின் நின்று கையசைத்து பிரியாவிடை பெற்று இமிகிரேஷன் நோக்கிச் சென்றோம்.
பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. கனடாயணம் தொடரும்.....
No comments:
Post a Comment